Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்: முதல்வர் பழனிசாமி

ஜனவரி 02, 2021 05:27

மதுரை: ‘வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்யவுள்ள முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

தொடர்ந்து மதுரை விமானநிலையம் அருகே, பெருங்குடியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக, அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் பேசியதாவது:

ஜெயலலிதா கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் சிந்தாமல், சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நாட்டுக்காக வாழ்ந்து மறைந்தனர். கருணாநிதி ஆட்சியில் அவர்கள் குடும்பம் மட்டும்தான் பிழைத்தது. திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தலாக வருகிற சட்டப்பேரவைத் தேர்தல்அமைய வேண்டும். திமுகவில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது. மு.க. ஸ்டாலின் மகன் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், ஸ்டாலின் பேரனும் அடுத்துவரத் தயாராக உள்ளார்.

திமுக ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சியாக இருந்ததில்லை. இது மக்கள் அரசு. அம்மா வழியில் நடக்கும் அரசு. தொடர்ந்து பல திட்டங்கள் உங்களுக்குக் கிடைக்க அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். திமுகவில் சாதாரணதொண்டர்களுக்கு பதவிகள் கிடைக்காது. இரு பெரும் தலைவர்களின் நல்ல திட்டங்கள் தொடரஎங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்