Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொட்டும் மழையிலும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

ஜனவரி 03, 2021 10:47

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் இன்று 39-வது நாளாக டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் எல்லைகளில் கூடாரங்களை அமைத்து தங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே டெல்லியில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

இதையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. குளிரும், மழையுமாக கடும் அவதியடைந்தாலும், போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். பல கூடாரங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. எனவே மாற்று இடங்களுக்கு சென்றனர்.

இது சம்பந்தமாக விவசாயிகள் சங்கத் தலைவர் அபிமன்யு கூறும்போது, ‘‘ஏற்கனவே கடும் குளிரில் அவதிப்பட்ட நாங்கள், இப்போது மழைநீரால் அவதிக்குள்ளாகி இருக்கிறோம். எங்கள் கஷ்டங்களை மத்திய அரசு புரிந்து கொண்டு தீர்வு காண வேண்டும்’’ என்று கூறினார்.விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையின் போது 2 கோரிக்கைகளை தீர்ப்பதற்கு முன்வந்தனர்.

இதைதொடர்ந்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளைய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடுகள் ஏற்படா விட்டால், மிக தீவிரப் போராட்டத்தில் குதிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.இதுதொடர்பாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் பல்பீர்சிங், தர்‌ஷன்பால், குர்ணம்சிங் சதுனி, அசோக் தவாலே, ஜெகஜித்சிங், அபிமன்யு கோகாட், யோகேந்திர யாதவ் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

கடந்த முறை பேச்சுவார்த்தை நடந்தபோது 2 கோரிக்கைகளை மட்டும் மத்திய அரசு ஏற்க சம்மதித்தது.நாங்கள் பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ஆனால் 2 சிறிய கோரிக்கைகளை மட்டும்தான் தீர்ப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அது சம்பந்தமாக கூட இன்னும் உறுதியான முடிவை மத்திய அரசு கூறவில்லை.

ஆனால் எங்களுடைய பெரிய கோரிக்கைகள் அப்படியே உள்ளன. குறிப்பாக 3 சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் எங்களது அழுத்தமான கோரிக்கை.ஆனால் இதை நாங்கள் வற்புறுத்தினால், தீர்வு காண முன்வராமல், அதற்கு மாற்று வழிகளை கூறுங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.

நாங்கள் போராட்டம் நடத்துவதே இந்த 3 சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் அதை மத்திய அரசு புறக்கணிக்கிறது. அடுத்ததாக குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் தர வேண்டும் என்று கூறுகிறோம். அதையும் ஏற்க மறுக்கிறார்கள்.எனவே எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், நாங்கள் போராட்டத்தை கைவிட முடியாது.

நாளைய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை தீர்க்க முன் வர வேண்டும். ஒருவேளை நாளைய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், நாங்கள் எங்கள் போராட்டத்தை மிக தீவிரமாக நடத்த இருக்கிறோம்.6-ந் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி டிராக்டர் அணிவகுப்பை நடத்த உள்ளோம். அத்துடன் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், வேறு மாதிரியான போராட்டங்கள் நடைபெறும்.

நாடு முழுவதும் 6-ந் தேதி முதல் போராட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறோம். 13-ந் தேதி மகரசங்கராந்தியன்று சட்ட நகல்கள் எரிக்கப்படும். 23-ந் தேதி உழவர்கள் சார்பு அமைப்புகள் சார்பில் அனைத்து மாநில கவர்னர்கள் மாளிகை முன்பு முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.26-ந் தேதி டெல்லி நகருக்குள் குடியரசு தின விழா கொண்டாடப்படும் ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த இருக்கிறோம்.

அன்றைய தினம் குடியரசு தின விழாவுக்கு நாங்கள் எந்த இடையூறும் செய்ய மாட்டோம். விழா முடிந்த பிறகு அதே பாதையில் எங்களுடைய அணிவகுப்பு நடைபெறும்.இதற்காக டெல்லியின் எல்லையில் முகாமிட்டிருக்கும் அனைத்து விவசாயிகளும் தலைநகருக்குள் நுழைவோம். டிராக்டர்கள், டிராலிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கும். விவசாயிகளும் அணிவகுத்து செல்வார்கள்.

நாடு முழுவதும் ஒவ்வொரு விவசாயி வீட்டில் இருந்து ஒருவராவது இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.எங்களை பொறுத்தவரையில் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்த விரும்புகிறோம். ஆனால் இனி மத்திய அரசுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.ஒன்று எங்களது கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண முன்வர வேண்டும். அல்லது டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 

தலைப்புச்செய்திகள்