Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆண்டிபட்டியில்  கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் - நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

ஜனவரி 05, 2021 06:01

தேனி : ஆண்டிபட்டியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்காததால் இருபதாண்டுகளாக தொற்று நோய்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி புறநகர் பகுதியில் அமைந்துள்ளது செல்வவிநாயகர் நகர் பகுதி. இப்பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர் .

மேலும் இப்பகுதி ஆண்டிப்பட்டி புறநகர்ப் பகுதியாக இருப்பதால் நாளுக்கு நாள்  விரிவாக்கம் அடைந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால்  வீடுகளில் பயன்படுத்தப்பட்டு  வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில்  ஓரங்களிலும் தேங்கி நிற்கிறது.
 
பல ஆண்டுகளுக்கும் மேலாக தெருவின் மேடு பள்ளங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்களும் தற்போதைய  மழைகாலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என பலருக்கும் பல வித தொற்று  நோய்கள் பரவி வருவது வழக்கமாக உள்ளது. 

இப்பகுதி மக்கள் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி பலமுறை  ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகம், மற்றும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனுக்கள் எழுதியும், புகார் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
  
தற்போதுதான்  கொரோனா தொற்று ஏற்பட்டு அந்த அலை  ஓய்வதற்குள் தற்போது இரண்டாம் சுற்று புதியவகை கொரோனோ வைரஸ் பரவும் சூழ்நிலையில் செல்வவிநாயகர் நகர் பகுதிக்கு கழிவுநீர் வாய்க்கால்களை உடனே அமைத்து தொற்று நோய்களிலிருந்து  காக்க தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் வேண்டுகோளாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்