Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி அருகே ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்கள் மாயம்

ஜனவரி 07, 2021 12:10

புதுச்சேரி: புதுச்சேரி அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே கொண்டாரெட்டிப்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் குமாரவேலு (16). பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் வேல்முருகன் (14) திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று (ஜன.07) விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், குமாரவேலு மற்றும் வேல்முருகன் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் 2 பேருடன் செட்டிப்பட்டு-திருவக்கரை இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய படுகை அணைக்கு இன்று பிற்பகல் குளிக்கச் சென்றனர்.

அங்கு நண்பர்கள் 4 பேரும் படுகை அணையில் இறங்கி ஆற்றில் குதித்தபடி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தொடர் மழையால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக அளவில் செல்லும் தண்ணீரில் குமாரவேலு, வேல்முருகன் இருவரும் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.

இதனைக் கண்ட மற்ற நண்பர்கள் இருவரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வருவதற்குள் அவர்கள் மாயமாகினர். உடனே இதுகுறித்து திருக்கனூர் போலீஸார் மற்றும் திருக்கனூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மாயமான மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக திருக்கனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏ செல்வம் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, தேடுதல் பணியை விரைவுபடுத்தினார்.

தலைப்புச்செய்திகள்