Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேனி அருகே எறும்புத்தின்னி ஓடுகளை விற்க முயற்சி 5 பேர் கைது

ஜனவரி 07, 2021 12:41

தேனி: கடமலைக்குண்டு பகுதியில், எறும்புத்தின்னி ஓடுகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக, மத்திய வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் வருசநாடு வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடமலைக்குண்டு பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடமலைக்குண்டு பஸ் நிறுத்தம் அருகே கையில் சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படியாக, அதே கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 50) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.மேலும் அவர் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தனர். அதில், 5¾ கிலோ எறும்புத்தின்னியின் ஓடுகள் இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை வருசநாடு வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் வருசநாடு அருகே உள்ள நொச்சிஓடை பகுதியை சேர்ந்த முனுசாமி (45), லட்சுமணன் (53), செல்லப்பாண்டி (48), வனராஜ் (61) ஆகியோரிடம் பணம் கொடுத்து எறும்புத்தின்னி ஓடுகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து சேகர் உள்பட 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்