Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரனா  தடுப்பூசிகளை வினியோகம் செய்ய ரூ.480 கோடி ஒதுக்கீடு

ஜனவரி 08, 2021 12:24

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அடுத்த வாரம் இந்த தடுப்பூசிகளை போடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒத்திகை இன்று நாடுமுழுவதும் 33 மாநிலங்களில் 234 மாவட்டங்களில் சுமார் 2,500 மையங்களில் நடைபெற்றது. சுமார் 3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவர்களில் முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக முதலில் 10 கோடி தடுப்பூசிகளை வாங்க இன்று மத்திய அரசு ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் இறுதியானதும், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து மாநில தலைநகரங்களில் உள்ள குடோன்களுக்கு தடுப்பூசிகள் நேரடியாக கொண்டு சென்று இருப்பு வைக்கப்படும்.

அதன்பிறகு இருப்பு வைக்கப்பட்ட இடங்களில் இருந்து நாடுமுழுவதும் உள்ள சிறுசிறு கிராம சுகாதார மையங்களுக்கு தடுப்பூசிகள் எடுத்துச் செல்லப்படும். இந்த பணிகளுக்காக மத்திய அரசு ரூ.480 கோடியை ஒதுக்கீடு செய்தது. மாநில அரசுகளுக்கு இந்த நிதி பிரித்து வழங்கப்படும்.

இதைதவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை குளிர்பதன சாதனங்கள் தேவை என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை வாங்குவதற்கும் இந்த நிதி செலவிடப்படும். இதுதவிர பயனாளிகள் பட்டியலும் தயார் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படும். லடாக், ஜம்மு-காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை கொண்டுசெல்வது சவாலான பணியாக கருதப்படுகிறது.

இதற்காக விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர புனே, ஐதராபாத் விமான நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்குகிறது. 

தலைப்புச்செய்திகள்