Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளுநருக்கு எதிராக புதுச்சேரி மாநில முதல்வர் போராட்டம் 

ஜனவரி 09, 2021 10:50

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாநிலத்தின் வளர்ச்சிக்கும்,  மக்கள் நலத்திட்டங்களுக்கும் தடையாக இருப்பதாகக் கூறி கிரண்பேடியைக் கண்டித்து ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள்  சார்பில் 4 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் அண்ணா சிலை அருகே தொடங்கியது.

முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநருக்கு எதிராக ஒரு முதலமைச்சர் அவரது இல்லத்திற்கு எதிரில் போராடிய சரித்திரம் இல்லை. 

சுமார் 27 கோரிக்கைகளை முன்வைத்து துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து மக்கள் நலத்திட்டங்களைத் தடுக்காதீர்கள்  என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு பயந்துகொண்டு பின்புற வழியாக டெல்லிக்குச் சென்று விட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார். 

மாநில அரசின் முடிவின் படி அனைத்து அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என கூறி ஆறு மாத காலத்திற்கு நாங்கள் வழங்கினோம். அரிசி வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் பணமாக செலுத்த துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். அரிசி வழங்க வேண்டும் என்று கூறினால் அதனைத் தடுத்து நிறுத்துகிறார்.

பாசிக், பாப்ஸ்கோ-ல் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை தடுத்து நிறுத்துகிறார். சனிப்பெயர்ச்சி விழா நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டார். நீதிமன்றத்துக்குச் சென்று உத்தரவு வாங்கி வந்தோம். புதுச்சேரி மக்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை படிப்படியாக துணைநிலை ஆளுநர் பறித்து வருகிறார். இதனை கண்டித்துத்தான் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. 

உயிர் தியாகம் செய்தாவது புதுச்சேரி மக்களின் அதிகாரத்தைப் பெற்றுத் தருவோம். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து துணைநிலை ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றார். மாநில துணை நிலை ஆளுநருக்கு எதிராக மாநில முதல்வர், அமைச்சர்கள்,  எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்துவது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்