Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நண்பர்களுடன் குளிக்கச்சென்ற மாணவர் பலி - பல மணி நேரம் தேடுதலுக்குப்பின் உடல் மீட்பு

ஜனவரி 10, 2021 10:27

தேனி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சார்ந்த கலைமணி என்பவரது மகன் வீரமணி (21). இவர் பொறியியல் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர்களுடன் கல்லூரியில்  படிக்கும் தனது தேனி மாவட்டம் கம்பம் பகுதி நண்பர்களை சந்திப்பதற்காக வீரமணி கம்பத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் கம்பம் அருகே உள்ள கூடலூர் கழுதை மேடு பகுதியில் பதினெட்டாம்  கால்வாய் தலைமதகு பகுதி முல்லைப் பெரியாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
 நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வீரமணி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் அவரை இழுத்துச் சென்றுள்ளது.

தற்போது  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முல்லை பெரியாற்றின் மூலம் வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அதனால் அப்பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் வீரமணி தண்ணீர் வேகத்தால் மீண்டு வர முடியாமல் தத்தளித்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தண்ணீரில் அலறல் சத்தத்துடன் இழுத்துச் செல்லப்பட்ட  வீரமணியை கண்ட அவரது நண்பர்கள் சத்தமிட்டு உள்ளனர். இதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக சென்று வீரமணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் வீரமணியை காப்பாற்ற முடியவில்லை. 

இதனையடுத்து உடனடியாக குமுளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் மூழ்கிய வீரமணியை தேடும்  முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து முல்லைப் பெரியாரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர்; நிறுத்தி தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர் . இரவு நேரமானதால் வீரமணியை மீட்க முடியவில்லை.

 இதனையடுத்து இன்று அதிகாலை முதல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீரமணியை தண்ணீரில் சென்று கேமரா மூலம் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  நீண்ட நேர தேடுதலுக்கு பின்பாக வீரமணி விழுந்த இடத்திலிருந்து அருகே பாறையின் இடுக்கில் அவரது உடல் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வீரமணியின் உடலை கம்பம்  தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் வீரமணி உடலை கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக குமுளி காவல்துறையினர் கொண்டு சென்றனர்.  இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பொறியியல் மாணவர் இறந்த செய்தி கம்பம் கூடலுர் பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்