Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் வரும் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி

ஜனவரி 10, 2021 01:36

சென்னை: கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் வருகிற 16-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்காக ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்தகட்டமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே ஆந்திரா, பஞ்சாப், அசாம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் முதலில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஒரே நேரத்தில் நடத்தி பார்க்கப்பட்டது. அதன்பிறகு 2-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 226 இடங்களில் நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், இட வசதிகள் ஆகியவை எவ்வாறு உள்ளன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்தல் சமயத்தில் கியூவில் வந்து முறைப்படி பதிவு செய்து ஓட்டு போடுவதுபோல் தடுப்பூசி போட வருபவர்களுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.சென்னையில் தடுப்பூசி போடும் பணியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் வந்து பார்வையிட்டார்.

இந்த நிலையில் தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த அனுபவங்களை ஒவ்வொரு மாநில அரசும் மத்திய சுகாதாரத்துறைக்கு விரிவாக அறிக்கை அளித்து இருந்தது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை ‘கோ-வின்’ இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் நாடு முழுவதும் இதற்காக நடத்தி முடிக்கப்பட்ட ஒத்திகை திருப்தியாக இருப்பதாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். சுகாதாரத்துறையின் இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருந்தார்.இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்குவது தொடர்பாக நாளை மாலை ஒவ்வொரு மாநில முதல்- மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற விவரங்கள் எடுத்துரைக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது - கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தமிழகத்தில் 226 இடங்களில் நடந்து முடிந்தது.

இந்த ஒத்திகையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை முழு திருப்தியை கொண்டுள்ளது. தமிழக மருந்து சேவை கழகம் மூலம் ஏற்கனவே 33 லட்சம் சிரஞ்சி, ஊசிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக கொரோனா தடுப்பு மருந்து விமானம் மூலம் எப்போது வரும் என்ற தகவலை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

இந்த மருந்து வந்ததும் சென்னையில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் அதை உடனுக்குடன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம். 2 கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கக்கூடிய அளவுக்கு நம்மிடம் வசதிகள் உள்ளன. 2-ம் கட்டமாக மாவட்ட அளவில் 2,880 இடங்களிலும் சேமித்து வைப்பதற்கு குளிர்சாதன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன் பிறகு கடை கோடி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடிய சிறிய கூலர் பெட்டிகளும் தயார் நிலையில் உள்ளது.தடுப்பூசி போடுவதற்கு 46 ஆயிரம் இடங்களை கண்டறிந்த போதிலும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தான் இந்த மருந்தை செலுத்த இருக்கிறோம். எனவே ஒரே சமயத்தில் அத்தனை இடங்களிலும் தடுப்பூசி போடப்படாது. இதுவரை 226 இடங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை முடிந்துள்ளது. தமிழகத்தில் 300 முதல் 500 இடங்களில் தடுப்பூசியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஏற்கனவே தடுப்பூசி போடுவதற்கு 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் யார்-யார்? முன் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி போடப்படும். யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்படமாட்டாது. இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் தான் போலியோ சொட்டு மருந்து முகாமை தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

பிரதமர் மோடி நாளை மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு பிறகு கொரோனா தடுப்பூசிக்கான மேலும் பல வழிமுறைகள் வெளியிடப்படும்.தமிழகத்தில் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் அவர் மதுரையில் இருப்பதால் அங்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தலைப்புச்செய்திகள்