Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரும் 18-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது

ஜனவரி 16, 2021 11:19

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையானது 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். தற்போது 6 மாதம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இந்த நிலையில் வரும் 18-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலாளர் முனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘புதுச்சேரி 14-வது சட்டப்பேரவையின் 4-ம் கூட்டத் தொடர் ஜனவரி 18-ம் தேதி, திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு சிறப்புக் கூட்டத்துக்கான மறுகூட்டம் கூட்டப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்தச் சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படுகிறது. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் நாராயணசாமியிடம் கடிதம் அளித்து, அதனை முதல்வர் ஏற்கவில்லை எனத் தகவல் பரவியுள்ளது.

மேலும், மற்றொரு அமைச்சரும் விரைவில் பாஜகவில் சேர உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுபோல் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் திமுகவும் காங்கிரஸ் ஆட்சி தொடர்பாக விமர்சித்து வருவதோடு, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடும் முடிவிவையும் எடுத்துள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்