Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வத்தலகுண்டு அருகே 300 ஆண்டுகள் பழமையான திருவிழா 

ஜனவரி 16, 2021 01:10

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டியில் வாழைப்பழங்களை சூறைவிடும் பாரம்பரிய திருவிழா இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வாழைப்பழங்களை சூறைவிட்டு வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ளது சோலைமலை அழகர்பெருமாள் கோயில். ஒவ்வோர் ஆண்டும் தை மாதம் மூன்றாம் தேதியன்று இந்த கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சூறைவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று மாலை ஊர் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமப்பகுதி முழுவதும் தண்டோரா போட்டு கோயிலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதையடுத்து கூடைகளில் வாழைப்பழங்களை சுமந்துகொண்டு பக்தர்கள் ஊர்வலமாகக் கோயில் நோக்கிச் சென்றனர்.

அங்கு ஆயிரக்கணக்கான வாழைப்பழங்களை கூடைகளில் பக்தர்கள் சுமந்து சென்றனர். கொண்டு சென்ற வாழைப்பழக் கூடைகளை கோயிலுக்குள் வைத்து வழிபட்டனர். சோலைமலை அழகர் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். இதையடுத்து வாழைப்பழங்கள் சூறைவிடும் நிகழ்வு தொடங்கியது. தாங்கள் கொண்டுசென்ற கூடைகளை கோயில் மேல்பகுதிக்கு எடுத்துச்சென்று அங்கிருந்து கூடையில் உள்ள வாழைப்பழங்களை சூறைவிட்டனர்.

சிலர் வாகனங்களில் வாழைப்பழங்களை ஆயிரக்கணக்கில் கொண்டுவந்து வாகனத்தின்மேல் நின்று கொண்டு சூறைவிட்டனர். கூடைநிறைய வாழைப்பழங்களை கொண்டு சென்றவர் கூட பிறர் சூறைவிடும் வாழைப்பழங்களை பெறுவதில் ஆர்வம்காட்டினர். கோயிலில் சூறைவிடப்படும் வாழைப்பழங்கள் பிரசாதமாக எண்ணி வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். பக்தர்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேறினால் நேர்த்திக்கடனாக வாழைப்பழங்கள் சூறைவிடுவதாக வேண்டிக்கொள்வது 300 ஆண்டுகள் பாரம்பரிய பழக்கமாக இந்த கிராமத்தில் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இந்த திருவிழாவில் பங்கேற்க வெளியூர்களில் வசிக்கும் சேவுகம்பட்டி கிராமமக்கள் தங்கள் ஊருக்கு வந்துவிடுகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு தொடர்ந்து கோயில் விழாவிலும் பங்கேற்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் வெளியூர்காரர்களும் இந்த கோயிலின் பெருமைகளை உணர்ந்து சுவாமிக்கு வாழைப்பழங்களை காணிக்தைகயாக செலுத்துகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்