Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைகை அணையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்

ஜனவரி 16, 2021 01:11

ஆண்டிப்பட்டி: வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார். வைகை அணையில் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் உயர்ந்ததும் 58-ம் கால்வாயில் நீர் திறப்பது வழக்கம். தற்போது நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. எனவே இதில் நீர்திறக்கும்படி விவசாயிகளின் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் முன்னிலையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தண்ணீரை திறந்து வைத்தார். பின்பு அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 58-ம் கால்வாய் திட்டத்திற்குஅதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது. 2018 ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்கட்ட சோதனையும் நடத்தப்பட்டது.

இத்திட்டத்தின்மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதி விவசாயிகளின் கனவு நனவாகி உள்ளது. தற்போது வினாடிக்கு 150கனஅடிநீர் வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள 1,912 ஏக்கர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட 373ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்டிகே.ஜக்கையன், பா.நீதிபதி, பெரியாறு வைகை வடிநிலக்கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் எம்.சுகுமார், செயற்பொறியாளர் வா.சுகுமாறன், வைகைஅணை உதவி செயற்பொறியாளர் சி.செல்வம், மதுரை-குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்