Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடு முழுவதும் ரூ.377 கோடி பணம் பறிமுதல் : தமிழகம் டாப்

ஏப்ரல் 04, 2019 07:43

புதுடில்லி: லோக்சபா தேர்தலையொட்டி, நேற்று (ஏப். 3-ம் தேதி) வரையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனைகளில், கணக்கில் வராத ரூ. 377 கோடி ரொக்கப் பணம், ரூ. 705 கோடி போதை பொருள், ரூ. 78 லட்சம் மதுபான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிகபட்சமாக, தமிழகத்தில், ரூ. 127.84 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள, 534 தொகுதிகளுக்கும், வரும், 11ல் துவங்கி, மே,19 வரை, ஏழு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு, 10ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நாடு முழுவதும், தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து, ஏப். 3-ம் தேதி வரையில் நாடு முழுவதும் நடத்திய அதிரடி சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி ரூ. 377 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டடது. இதில், அதிகபட்சமாக, ரூ. 127.84 கோடி ரொக்கப்பணம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. உத்திரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் 78 லட்சம் லி்ட்டர் மதுபானங்களும், பஞ்சாபில் ரூ.116 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. தவிர ரூ. 312 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களும் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்