Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் தலைமை மீது குஸ்பு கடும் அதிருப்தி

ஏப்ரல் 04, 2019 08:04

திருச்சி: படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதை காரணம் காட்டி, தேர்தல் பிரசாரத்தை, நடிகை குஷ்பு தவிர்த்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க.,வில் இருந்து விலகி, காங்., கட்சியில், நடிகை குஷ்பு சேர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவருக்கு, அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குஷ்பு, 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பினார்; 'சீட்' கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்தார். தற்போதைய லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில் போட்டியிட, 'சீட்' கேட்டார். ஆனால், அவரது எதிரியான, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு, அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், காங்., தலைமை மீது, குஷ்பு கடும் அதிருப்தியில் உள்ளார். 

இந்நிலையில், தமிழகத்தில் பிரசாரம் செய்யவுள்ள, காங்., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், குஷ்பு பெயரை, 29வதாக சேர்த்துள்ளனர். சமீபத்தில் சேர்ந்த, திருநங்கை அப்சராவிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். சில நாட்களுக்கு முன், கட்சியில் சேர்ந்த, நடிகை ஊர்மிளாவிற்கு, மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், காங்., மேலிடம் மீது, கடும் கோபத்தில் குஷ்பு உள்ளார். தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், தேர்தல் பிரசாரத்தை, அவர் தவிர்க்க துவங்கியுள்ளார். 

தமிழக காங்., வேட்பாளர்கள் சிலர், அவரை பிரசாரத்திற்கு அழைத்துள்ளனர். படப்பிடிப்பில், பிசியாக இருப்பதாக கூறி, அவர்களது அழைப்பை, குஷ்பு தட்டிக்கழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு, 13 நாட்களே உள்ள நிலையில், இத்தகவலை, தமிழக காங்., தலைவர்கள், டில்லி மேலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பிரசாரம் செய்யாத பட்சத்தில், அவர் மீது, கட்சி ரீதியாக நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளது.

தலைப்புச்செய்திகள்