Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி - கம்பம்

ஜனவரி 20, 2021 09:04

தேனி : கம்பம் புதிய பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.இது குறித்து  கம்பம் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தேனி மாவட்டம் கம்பம் மணிநகரம் பகுதியைச் சார்ந்தவர்  ஜெயராஜ். இவர் கேரள மாநிலம் கம்பம்மெட்டு அருகே உள்ள புளியமலைப்பகுதியில் ஏலத் தோட்ட விவசாயம் செய்து வருகிறார்.

இவரது மகன் சரவணகுமார் (20). தேனி கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் சரவணகுமார் அவரது தந்தைக்கு உதவியாக அவ்வப்போது ஏலத் தோட்டத்திற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார்.

 இன்று காலை சரவணகுமார் இருசக்கர வாகனத்தில் புளியமலையில் வேலை செய்து வரும் தனது தந்தைக்கு உணவு எடுத்துக்கொண்டு கம்பத்தில் இருந்து சென்றுள்ளார். கம்பம் உத்தமபாளையம,; சின்னமனூர், தேனி போன்ற பகுதிகளில் தற்போது பைபாஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு பகுதிக்கு சரவணகுமார் சென்றுகொண்டிருந்தபோது கம்பம் புதிய பைபாஸ் சாலை அருகே கூடலூரில் இருந்து தேனி நோக்கி  சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம்(பிக்கப்) அதிவேகமாக வந்து சரவணகுமார் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட நிலையில் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனையடுத்து தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு காவல் துறையினர் இறந்த  சரவணக்குமாரின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு  செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்