Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிக்கும் பணம்: மக்கள் கோபம்

ஏப்ரல் 04, 2019 09:07

சென்னை: தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ளன. கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றன. தேர்தல் கமிஷனும், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அனைத்தையும் தாண்டி, மக்கள் விவாதிக்கும் விஷயம்: பணம். உங்க ஏரியாவில் குடுத்துட்டாங்களா...? எந்த கட்சில்லாம் குடுத்திருக்கு...? எவ்வளவு குடுத்தாங்க...? தவணையா, புல்லா...? எந்த தொகுதியை சுற்றி வந்தாலும், காதில் விழும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.வேலுாரில், பல கோடி சிக்கிய செய்தி பரவியபின், மேற்படி கேள்விகள் வேகம் எடுத்திருக்கின்றன. 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே' என்று கட்சிகளையும், 'ஓட்டை விலைக்கு விற்காதே' என்று மக்களையும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கிறது.  
சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த கோஷங்களை பிரசாரமாக நடத்துகின்றன. பிரபலங்களும், தம் பங்குக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகின்றனர். ஆனால், பொதுமக்கள் இதையெல்லாம் ரசிக்கவில்லை என்பதுதான் கள எதார்த்தம்.  

காரணம், ஓட்டுக்கு தரப்படும் பணம், தங்களுக்கு சொந்தமானது என்ற எண்ணம், மக்கள் மனதில் இறுகிக் கிடக்கிறது. அரசியல்வாதி நம்மிடம் பல வழிகளில் கொள்ளை அடித்த பணத்தை, நமக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் தான் தேர்தல். அதை தடுப்பது தான் தவறு என்கின்றனர். 'துரைமுருகன் வீட்டில் இத்தனை கோடி சிக்கியிருக்கிறது என்று செய்தி வாசிக்கின்றனர். அவர் என்ன, ஏர் பிடித்து வயலில் உழைத்து சம்பாதித்த பணமா அது? பொதுப்பணித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் உட்கார்ந்து சேர்த்த பணம் அது. அதில், ஒரு பகுதியை எடுத்து, தன் மகனின் வெற்றிக்காக மக்களுக்கு வினியோகிக்கிறார். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு,' என்று கேட்கின்றனர், வேலுார் தொகுதி வாக்காளர்கள்.  

'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் ஜனநாயகம் செத்துப் போகுமே?' என்ற கேள்வி அவர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்குகிறது. 'ஆளும் கட்சியாக இருந்தால், தலைக்கு, ஆறாயிரம், இரண்டாயிரம் என்று, பேங்க் அக்கவுன்டில் போடுகின்றனர். அது லஞ்சம் இல்லையா? உண்மையிலேயே எங்கள் மீதான அக்கறை என்றால், ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகளில் இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை? தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பணம் கொடுக்க தோன்றுகிறது என்றால், அது லஞ்சம் அல்லாமல் வேறென்ன? ஆட்சியில் இருப்பவர்கள் பகிரங்கமாக எங்களுக்கு தருவதை, ஆட்சியில் இல்லாதவர்கள் ரகசியமாக தருகின்றனர். அரசாங்கம் கொடுப்பதை வாங்கினால் மட்டும் ஜனநாயகம் செத்துப் போகாதா?' என, கேட்கின்றனர். 

'வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கை, ஒருதலைப்பட்சமானது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை, அனேகமாக எல்லா தொகுதி வாக்காளர்களும் ஆமோதிக்கின்றனர். 'ஆளும் கட்சியும் பணம் கடத்துது. பெரிய மனுசங்க போற வேன்லயும், கார்லயும் பொட்டிகள் போகுது. எந்த பறக்கும் படையும் அதை மட்டும் தொடுறது இல்ல. எதிர்க்கட்சிகள்னா மட்டும், வீடு தேடி, ரோடு தேடி, 'ரெய்டு' நடத்தி பிடிக்குது. இது ஓரவஞ்சனை இல்லாம வேற என்னவாம்?' என, பெண்களே குரல் உயர்த்தி கேட்கின்றனர். ஆர்.கே., நகர் தேர்தலில் நடந்த கூத்துகளை, அமைச்சரே பட்டுவாடா ஆவணங்களை தூக்கி எறிந்ததை, தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை, பதிவு செய்த வழக்கில் முதல்வரின் பெயரும் இருந்ததை, இன்றுவரை அதற்கெல்லாம் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ, அரசோ முடிவு கட்ட முன்வராததை, தேதி வாரியாக எடுத்து வீசுகின்றனர், கேள்விகளாக. புதிய, ஊடகத்தின் வீச்சு சுரீர் என உறைக்கிறது.  

'இந்த நாட்டில், தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படும், ஒரு மக்கள் பிரதிநிதி, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான செலவுக்கணக்கு தாக்கல் செய்து, தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறான் என்று சொன்னவர் யார், தெரியுமா?' என்று ஒரு இளைஞன் கேட்டபோது, சில நொடிகள் திணறித்தான் போனோம். அந்த பொன்மொழியை சொன்னவர், மறைந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய்.  
எல்லா விஷயங்களிலும் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் கைகோர்க்கும் ஒரே விஷயம், தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் தான். கட்சிகள் கணக்கு காட்ட வேண்டியது இல்லை; வரி செலுத்த வேண்டியது இல்லை; நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிட வேண்டியது இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... என்று அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எந்தக் கட்சியின் அரசு என்ற கேள்வியே எழவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது மாறாது. 

'நோய் நாடி நோய் முதல் நாடி...ன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். 'அஞ்சு வருசம் பதவில இருந்தா சம்பாதிச்சுரலாம்னு தெரிஞ்சுதான ஓட்டுக்கு, நாலாயிரம், அஞ்சாயிரம்னு குடுக்குறாங்க.. அப்படி சம்பாதிக்க முடியாம எல்லா வழியையும் அடச்சிட்டா இப்படி முதலீடு செய்ய மனசு வருமா? அத செய்யாம ஜனங்கள தடுக்கறதும் பயமுறுத்துறதும், வேஸ்ட்,' என, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுட்டிக்காட்டியதை மறுக்க இயலவில்லை.பொது புத்தியில் மக்கள், பணத்துக்காக ஒரு நியாயத்தைச் சொன்னால், அதை ஏற்க சட்டம் அனுமதிக்காது தான். ஆனால், சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் அமைப்புகள் மீதுமே நம்பிக்கை குறைந்து வருகிற சூழலில், மக்கள் பேச்சில் உள்ள நியாயத்தை அடியோடு புறக்கணிக்கவும் முடியாது. சமூக பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும், அவசரமாக நமக்கு தேவைப்படுவது, தேர்தல் சீர்திருத்தம் என்பதை, அரசியல்வாதிகள் உணர எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வாக்காளர்கள். 
 

தலைப்புச்செய்திகள்