Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லையில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கப்பட்டது

ஜனவரி 21, 2021 08:59

திருநெல்வேலி :  மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பதினொன்றாம் வகுப்புகளில் பயின்று வரும், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிடும்  திட்டத்தை,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2001-ஆம் ஆண்டு,  அறிமுகப்படுத்தினார்.

அன்று முதல்  இன்று வரையிலும், அத்திட்டம் இடைவிடாது தொய்வின்றி  தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகரப்பகுதியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான,  தச்சை என்.கணேசராஜா, ஒரேநாளில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள, ம.தி.தா.இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய  இரண்டு பள்ளிக்கூடங்களில்,  மொத்தம் 221 சைக்கிள்களை வழங்கி, மாணவ, மாணவிகளை, வாழ்த்திப் பேசினார்.

அப்போது அவர், மாணவச் சமுதாயத்தின், நலன்கருதி, தமிழக முன்னாள்  முதல்வர்  மாண்புமிகு அம்மா அவர்களால், அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள, உன்னதமான திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ், நடப்பு 2020- 21 கல்வியாண்டில், மாநிலம் முழுவதிலுமாக,  மொத்தம் 5 லட்சத்து, 45 ஆயிரத்து 166 மாணவ, மாணவிகளுக்கு, இந்த சைக்கிள் வழங்கப்பட்டு வருகின்றன.  சைக்கிளைப் பெற்றுள்ள அனைவரும், நன்கு படித்து, அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று,  நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை தேடி, தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என, பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்