Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட ஊர்வலம்

ஜனவரி 21, 2021 10:40

பெங்களூரு : மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களால் வேளாண் சந்தைகள் படிப்படியாக மூடப்படும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் அரசு இதை மறுக்கிறது. அதே போல் இந்த புதிய சட்டங்களால் விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு விலை நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். 

ஆனால் இதையும் மறுத்துள்ள மத்திய அரசு, எக்காரணம் கொண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை நிறுத்தப்படாது என்று கூறியுள்ளது. ஆனாலும் மத்திய அரசு தனது 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியின் புறநகர் பகுதியில் பகல்-இரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், உடல் நடுங்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் உயிரையும் விட்டுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கர்நாடக காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் கூடிய காங்கிரசார், அங்கிருந்து பிரமாண்டமான முறையில் ஊர்வலமாக கவர்னர் மாளிகையை நோக்கி புறப்பட்டு சென்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினர். அவர்கள் டிராக்டரில் அமர்ந்து வந்தனர்.

அவர்கள் சுதந்திர பூங்கா வளாகத்திற்குள் வந்தனர். மத்திய-மாநில அரசுகளின் வேளாண் சட்டங்களை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அங்கு காங்கிரசார் ஒன்று கூடினர். அங்கு போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை வாபஸ் பெற விவசாயிகள் டெல்லியில் கடந்த 58 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் என விவசாயிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.

ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. பிரதமர் மோடிக்கு மனிதத்துவம் இல்லை. மத்திய அரசு 10 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் தீர்வு எட்டப்படவில்லை. மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. விவசாயிகள் தங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு, அந்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக, அரசியல் அமைப்புக்கு உட்பட்டு இருந்தால் சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்குமா?. விவசாயிகள் கிளர்ந்து எழுந்துள்ளனர். அதனால் அந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். முன்பு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினர். அத்தகைய நிலை இங்கு வரும். அதற்கு முன்பு மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு சித்தராமையா பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்