Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல்நலக்குறைவிற்கும் தொடர்பு இருக்கலாம் சீமான் சந்தேகம்

ஜனவரி 24, 2021 07:43

திருநெல்வேலி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணத்திற்கும், சசிகலாவின் உடல்நலக்குறைவுக்கும், தொடர்பு இருக்கலாம் என்னும் சந்தேகம் எல்லோருக்கும் இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின், தென்மண்டல சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஆகியன திருநெல்வேலி,  பாளையங் கோட்டையில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும், சீமான் பங்கேற்று, தமிழக  சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பல்வேறு  ஆலோசனைகளை, கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிப் பேசினார். தொடர்ந்து, தென் மண்டலத்திற்கு உட்பட்ட, 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் , கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்பாளரையும், அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர், மாலையில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறும்போது... நிலையான அமைப்பு, வலுவான அடிப்படை, மிகப்பெரிய  அரசியல் மாற்றம் மற்றும்  தன்னலமற்ற தூய்மையான,  தமிழர் ஆட்சியைத் தருவது இவை தாம், நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் ஆகும். அத்துடன்,  தடையற்ற மின்சாரம், தரமான கல்வி, உயர்தர மருத்துவம் ஆகியவற்றை தமிழக மக்கள் அனைவருக்கும்,  இலவசமாக வழங்குவதும், தங்கள் கட்சியின் பிரதான  நோக்கம் ஆகும். இவற்றை முன்வைத்தே, சட்டமன்றத் தேர்தலில்,  வாக்குகளைச் சேகரிப்போம்.

ஒன்று புள்ளி ஒன்று சதவிகிதமாக இருந்த, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி, கடந்த  உள்ளாட்சித் தேர்தலில், பன்னிரெண்டு சதவிகிதமாக, உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திரங்கள் மீது, முழுமையாக  நம்பிக்கை இல்லை. இந்த  எந்திரங்கள் எல்லாவற்றிலும், நூறு சதவிகிதம் அளவுக்கு தவறுகள் தான் நடக்கின்றன.

வாக்கு இயந்திரத்தை, எங்கள் கைகளில் தந்தால், எங்களுக்கு  எத்தனைத் தொகுதிகளில் வெற்றி என்பதை, இப்பொழுதே எங்களால் சொல்ல முடியும். நான்கு ஆண்டுகளாக, சசிகலாவின் உடல் நிலையில், ஒன்றுமே இல்லாத நிலையில், திடீரென அவருக்கு உடல் நலம் குன்றியுள்ளது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்,  டில்லி பயணத்திற்கும், சசிகலாவின் உடல் நலக்குறைவுக்கும், தொடர்பு இருக்கலாம் என்னும்  சந்தேகம் எல்லோருக்கும்  இருக்கிறது. இலங்கை மீது, போர் தொடுத்துதான், நம்மால் கச்சத்தீவை,   மீட்க முடியும்.  கட்சத்தீவை மீட்கும் முயற்சியில், சர்வதேச நீதிமன்றத்தை,  மத்திய அரசு  நாடலாம். தனி அமைப்பால், ஒன்றும் செய்ய  முடியாது.

காட்டுப்பள்ளியில், சுமார் ஆறாயிரம் ஏக்கரில், அதானி துறைமுகம் அமைவதை, நாம் தமிழர் கட்சி, கடுமையாக எதிர்க்கின்றது. டெல்லியில், விவசாயிகள் எப்படி  போராட்டம் நடத்தி வருகின்றார்களோ,  அது போன்றே, நாம் தமிழர் கட்சியின்  போராட்டம்,  அதானி துறைமுகத்தை எதிர்ப்பதில் இருக்கும் என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்