Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனி சின்னத்தில் தான் போட்டி -மனிதநேய மக்கள் கட்சி

ஜனவரி 25, 2021 12:21

திருநெல்வேலி : தமிழக சட்டமன்றத் தேர்தலில்,தனி சின்னத்தில் தான் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்றும்  திமுகவின் சின்னத்தில்   போட்டியிடாது என திருநெல்வேலியில்,  மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், விரைவில் நடைபெற உள்ள, சட்டமன்றத் தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சியானது, தனி சின்னத்தில் தான் போட்டியிடும், தி.மு.க.வின் சின்னத்தில்  ஒருபோதும் போட்டியிடாது. அதே நேரத்தில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு,

கூட்டணிக் கட்சிகளைத் தி.மு.க.  நிர்பந்திக்கவும் இல்லை என, மனிதநேய மக்கள் கட்சியின்  மாநிலத்தலைவர் பேராசிரியர் எம்.ஹெய்ச். ஜவாஹிருல்லா உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான மனிதநேய மக்கள் கட்சியின், தென்மண்டல பொதுக்குழுக் கூட்டம், திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் உள்ள,

தனியார் திருமண மண்டபத்தில், இன்று (ஜனவரி.24) காலையில் நடைபெற்றது. கட்சியின், திருநெல்வேலி  மாவட்டத் தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன்  வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில்,  கட்சியின், மாநிலத்தலைவர் தலைவர் பேராசிரியர் எம். ஹெய்ச்.  ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்,  திமுகவுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டு  தேவையான இடங்களை மனிதநேய மக்கள் கட்சி, கேட்டுப் பெறும் என்று குறிப்பிட்டார்.  தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் விருப்பங்களை, நிறைவேற்றிடும் வகையில், நல்ல முடிவுகளை அறிவிப்பார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக, மத்திய அரசு கொண்டு  வந்த, குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, வாக்களித்து விட்டு, கோவை வந்த, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜமாத் அமைப்பினரை அழைத்து, அண்ணா தி. மு.க. அரசு,  இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும்! என்று சொல்லி இருப்பது எந்த வகையில் நியாயம்?

என்று கேட்ட ஜவாஹிருல்லா, பழனிச்சாமியின் பேச்சை, இஸ்லாமிய மக்கள்,  ஒரு போதும் நம்பமாட்டார்கள்!" என்றும் குறிப்பிட்டார். கூட்டத்தில், மாநில  பொதுச் செயலாளர் அப்துல் சமது, செயலாளர் மைதீன் கான் சேட் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்