Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரட்டை இலை சின்னம் பதித்த சேலைகள் பறிமுதல்

ஏப்ரல் 05, 2019 06:01

தேனி: பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டி போடுகிறார். அதன் அடிப்படையில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரும் தேர்தல் களத்தில் குதித்து வாக்காள மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதுபோல் ஓ.பி.எஸ்.ஸின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ரவிக்கு ஓட்டுப் போடச் சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். 

இப்படி ஓ.பி.எஸ். குடும்பம் மக்களை சந்திக்க போகும்போது ஏற்கனவே சேலை, வேஷ்டிகளை அவர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் மீண்டும் வாக்காள மக்களுக்கு சேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரட்டை இலை சின்னம் பதித்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சேலைகளை சென்னையிலிருந்து, கம்பத்திற்கு வந்திருக்கிறது. இப்படி, அப்படி வந்த இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள் கம்பம் சுபா டிராவல்ஸ் அலுவலகத்தில் சேலைகள் பண்டல், பண்டலாக குவிந்து கிடப்பதாக மாவட்ட தேர்தல் அதிகார்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீமன் தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மூவேந்திரன் மற்றும் காவலர்களுடன், சுபா டிராவல்ஸ் அலுவலகத்திற்குச் சென்று, அங்கே கிடந்த பண்டல்களை சோதனை செய்தனர். 

அதில் இரட்டை இலை பதித்த சேலைகள் இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி டிராவல்ஸ் பணியாளர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின்னான பதில் கூறியுள்ளனர். இதனால் விசாரணை திருப்தியில்லாததால் இரட்டை இலை படம் போட்ட சேலைகளின் பண்டல்களை கைப்பற்றி உத்தமபாளையம் வட்டாட்சியர் சத்யபாமாவிடம் ஒப்படைத்தனர்.  

இதுபோல் தேனி மாவட்டத்திலுள்ள தனியார் டிராவல்ஸிலும் இரட்டை இலை பொறித்த சேலை பண்டல்கள் அனுப்பப்பட்டு இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் கம்பம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
 

 

தலைப்புச்செய்திகள்