Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருதமலை முருகன் கோவிலில் தேரோட்டம் ரத்து

ஜனவரி 27, 2021 06:44

வடவள்ளி : கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

 இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி இரவு வாஸ்துபூஜை மற்றும் 22-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 6 மணிக்குள் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனோ பரவல் காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று (புதன்கிழமை) இரவு பாதயாத்திரை வரும் பக்தர்கள், பால்குடம், பால்காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் பக்தர்கள் காலை 7 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கோவிலுக்கு கார் மற்றும் இரண்டு சக்கர வாகன ங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த தகவலை கோவில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) விமலா தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்