Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

ஜனவரி 30, 2021 11:49

பெங்களூரு: சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலாவுக்கு இப்போது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் நீங்கிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஆனாலும், விதிமுறைப்படி, 3 நாட்கள் செயற்கை சுவாச கருவி உதவியின்றி சிகிச்சை பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட, 10-வது நாளில், மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வந்தால் உடனடியாக மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் டாக்டர்கள் கூறியிருந்தனர்.

கர்நாடக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி, 10 நாட்கள் ஆனாலே கொரோனா பாதிப்புகள் இல்லை என்றால் நோயாளியை விடுவிக்க முடியும். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் சசிகலா தமிழகம் திரும்பிய பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் தனக்கு கொரோனா தொற்று முழுமையாக குணம் அடைந்துவிட்டது என்பதை தெரிவிப்பதற்காக சசிகலா கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

பரிசோதனை முடிவுகளை பொறுத்தே, அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிய வரும். கொரோனா முடிவுகளில் நெகடிவ் என வந்தால் உடனே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்கின்றன மருத்துவமனை வட்டாரங்கள். இதுபற்றி விக்டோரியா அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், சசிகலா த‌ற்போது ச‌தாரண கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நாடித்துடிப்பு, சுவாசம், ஆக்ஸிஜன் அளவு ஆகியவை சீராக உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவில் சிறிய அளவில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. 3-வது நாளாக ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் சுயமாக சுவாசிக்கிறார்.

அவரது உடலில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் அவரை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எளிய உணவை அவரே உட்கொள்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் ஆவதால் அவருக்கு மீண்டும் ஒருமுறை சி.டி.ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறோம்.

அதன் முடிவுகள் வந்த பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்து கூற முடியும். அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தால், உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்படுவார். தற்போதைய நிலையில் அவரது உடல்நிலையை வைத்துப் பார்க்கும்போது விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றனர்.

டிஸ்சார்ஜ் ஆனதும் சசிகலா பெங்களூருவில் ஒரு பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு பெங்களூருவில் இருந்து நாளை மறுநாள்(திங்கட்கிழமை) அல்லது 5-ந்தேதி சசிகலா சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தலைப்புச்செய்திகள்