Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெற்றியை தீர்மானிப்பது ஜாதியா, வளர்ச்சியா?

ஏப்ரல் 05, 2019 07:48

உத்தரபிரதேசம்: ஜாதி, மத பேதமில்லாத சமத்துவ சமூகம் தான் தங்கள் கொள்கை என, வேடம் போடும் அரசியல் கட்சிகளின் சாயம் வெளுப்பது, தேர்தலின்போது தான்! 
ஜாதி பலத்தின் அடிப்படையில் தான், வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். சில தொகுதிகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போட்டியிட்டு, வென்றும் வருகின்றனர்.இதற்கு, உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில், ஜாட் வகுப்பினர் பெரும்பான்மையாக உள்ள, பக்பட் லோக்சபா தொகுதியே சான்று.இங்கு, ஜாட் வகுப்பைச் சேர்ந்த, பாரதிய லோக்தள தலைவர் சரண்சிங், 1977 தேர்தலில் வென்று, மொரார்ஜி தேசாயை தொடர்ந்து, 1979ல் பிரதமரானார். 

அடுத்து நடந்த, 1980, 1984 தேர்தல்களிலும் வென்றார். அதன் பின், அவர் மகன், அஜித்சிங், 1989, 1991, 1996 தேர்தல்களில் வென்றாலும், 1998ல், பா.ஜ., வேட்பாளர், சோம்பால் சிங்கிடம் தோல்வியடைந்தார்.இதையடுத்து, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியை துவக்கிய, அஜித்சிங், 1999, 2004, 2009 தேர்தல்களில் தொடர்ந்து வென்றார். இந்த வகையில், பக்பட் தொகுதி மக்கள், ஒன்பது தேர்தல்களில், தந்தை, மகனை, டில்லிக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால், அதே வாக்காளர்கள், 2014ல், பா.ஜ., வேட்பாளர், சத்யபால் சிங்கிற்கு, ஆதரவளித்து, அஜித்சிங்கை வீட்டிற்கு அனுப்பினர். இதற்கு, மோடி அலை காரணம் எனலாம். 

இம்முறை, அஜித்சிங், தன் மகன், ஜெயந்த் சவுத்ரியை, பக்பட் தொகுதி, ராஷ்ட்ரீய லோக் தள வேட்பாளராக களமிறக்கியுள்ளார். இவர் கட்சி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியுடன், 'மெகா' கூட்டணியில் இணைந்துள்ளது. 

அதனால், இம்முறை, ஜாட், யாதவ், முஸ்லிம் ஓட்டுகளை, சுலபமாக அள்ளலாம். 2013ல் நடந்த மதக் கலவரத்திற்கு பின், பா.ஜ.,வுக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டும் சுளையாக கிடைக்கும் என, அஜித்சிங் கணக்கு போட்டுள்ளார்.ஆனால், பா.ஜ., வேறு கணக்கு போடுகிறது. பக்பட் தொகுதியில், அக்கட்சி, சார்பில் மீண்டும் போட்டியிடும், மத்திய இணை அமைச்சர், சத்யபால் சிங், தொகுதியிலேயே பிறந்து வளர்ந்தவர். தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.  

அதனால், ஜாட் மட்டுமின்றி, குர்ஜார், காஷ்யப், சைனிஸ் போன்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஓட்டுகளும், பா.ஜ.,வுக்கு உள்ள, உயர் ஜாதியினர் ஓட்டும் வெற்றிக்கு கைகொடுக்கும் என, அவர் நம்புகிறார்.அது, சாத்தியமா என, தெரியவில்லை. ஏனெனில், பக்பட் தொகுதியில், 16 லட்சம் வாக்காளர்களில், 4.35 லட்சம் பேர், ஜாட் வகுப்பைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள், 3.25 லட்சமும், 2.25 லட்சம் தலித் வாக்காளர்களும் உள்ளனர். 
பா.ஜ.,வுக்கு எதிராக, பகுஜன், சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகியவை, மெகா கூட்டணி அமைத்துள்ளதால், ஜாதி, மதம் தான், இத்தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் என, தெரிகிறது.ஆனால், ''ஜாதி, மத ரசவாத வேலையெல்லாம் பக்பட் மக்களிடம் எடுபடாது. வளர்ச்சி, சீரிய நிர்வாகம், பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பார்கள்,'' இவ்வாறு பா.ஜ.,வின் சத்யபால் சிங் கூறுகிறார்.

தலைப்புச்செய்திகள்