Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலங்கானா மாநிலத்திற்கு ரூ. 179 கோடி கூடுதல் நிதி 

ஜனவரி 30, 2021 01:42

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, மூலதன திட்டங்களை மேற்கொள்வதற்காக தெலங்கானா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 179 கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மூலதன திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்த மாநிலத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 179 கோடிக்கும் கூடுதலான தொகை இதுவாகும். ஒரே நாடு-ஒரே ரேசன் அட்டை, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய மூன்று மக்கள் மைய சீர்திருத்தங்களை தெலங்கானா மாநிலம் செயல்படுத்திவருவதை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி’ திட்டத்தின் கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோல் 3 சீர்திருத்தங்களை செயல்படுத்தியதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு ரூ. 660 கோடியை கூடுதல் மூலதன திட்டங்களுக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இரண்டாவது மாநிலமாக தெலங்கானாவிற்கு தற்போது கூடுதல் நிதி கிடைக்கவுள்ளது.

கூடுதலாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள ரூ. 179 கோடியில் முதல் தவணையாக ரூ. 89.50 கோடி மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து மூலதன திட்டங்களும் சாலை துறையில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுவரை 27 மாநிலங்களுக்கு ரூ. 10835.50 கோடி மதிப்பிலான மூலதன செலவின திட்டங்களுக்கு நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதோடு, முதல் தவணையாக ரூபாய் 5417.70 கோடி மாநிலங்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் திட்டத்தின் பயன்களை தமிழகம் பெறவில்லை.
 

தலைப்புச்செய்திகள்