Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழனியில் கோவில் யானைக்கு கொரோனா பரிசோதனை

பிப்ரவரி 03, 2021 06:59

பழனி: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெறும் புத்துணர்வு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் யானைகளும் கலந்து கொள்ளும். இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். யானையுடன் வரும் பாகன்கள், வேன் டிரைவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முகாமிற்கு அழைத்துவரவேண்டும்.

மேலும் லாரியில் ஏற மறுக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்து வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. யானையை அழைத்துவரும் லாரி முற்றிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பழனி கோவில் யானை கஸ்தூரிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மேலும் யானையுடன் செல்லும் பாகன்கள், உதவியாளர், டிரைவர் உள்பட 13 பேருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானையை முகாமிற்கு அழைத்துச் செல்லும் வகையில் லாரியில் ஏற்றி இறங்க வைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்