Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மார்ச் மாத இறுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்

பிப்ரவரி 03, 2021 07:12

புதுடெல்லி: இந்தியாவில் கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு ஊசி போட திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்படி நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருந்தனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்து தானாக முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் குறைந்த அளவு ஊழியர்களே தற்போது தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 30-ந் தேதி வரையில் நாடு முழுவதும் 37 லட்சத்து 6 ஆயிரத்து 157 பேர் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். அதாவது இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 37 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வமும் குறைந்துள்ளது. எனவேதான் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட இருக்கிறது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1 கோடி தடுப்பூசி மருந்தில் இன்னும் 63 லட்சம் மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்த மருந்துகள் 6 மாத காலத்தில் காலாவதி ஆகிவிடும். அதன் பிறகு அதை பயன்படுத்த முடியாது. எனவே விரைவில் மருந்துகளை பயன்படுத்தி விட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வம் குறைவாக இருப்பதால் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனியார்களுக்கும் தடுப்பூசியை விற்பதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு ஊசி போட்டு முடிந்ததும் வெளி மார்க்கெட்டில் ஊசி மருந்து விற்பனை செய்யப்படும். அடுத்த மாதம் இறுதியில் இது வெளி மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று மூத்த அதிகாரிகள் கூறினார்கள்.

கோவிஷீல்டு மருந்தை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் ஜனவரி மாதத்தில் மட்டும் 10 கோடி டோஸ் மருந்துகளை உற்பத்தி செய்துள்ளது. அதில் இந்தியா பயன்படுத்தியது தவிர குறிப்பிட்ட சதவீத மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசி எண்ணிக்கை பல மாநிலங்களில் இலக்கை விட மிக குறைவாகவே இருக்கிறது. பல மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடும்படி மாநில அரசுகளிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்