Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக - அமமுக இணைய 100 சதவீதம்வாய்ப்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

பிப்ரவரி 03, 2021 09:07

சென்னை:  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற பலரின் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் முடிந்ததும், முதல்வர் திறந்துவைத்தார். தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் சென்றுவந்தால், இடையூறு ஏற்படும். இதனாலேயே நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக.,வையும் எதிர்த்து போட்டியிட்ட அமமுக, இப்போது அதிமுக.,வை கைப்பற்ற நினைப்பதை எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

முதல்வர் கூறியது போல, அதிமுக - அமமுக இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை. சசிகலா வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது. அமமுக கட்சி ஆரம்பித்து 3 சதவீத ஓட்டு பலத்தை வைத்திருந்தனர். இப்போது அதுவும் கீழிறங்கியுள்ளது. அதிமுக.,வில் உறுப்பினராக இல்லாத தினகரன், சசிகலா ஆகியோர் எப்படி அதிமுக.,விற்கு உரிமை கோர முடியும்?. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக ஆட்சியே இன்னும் 100 ஆண்டுகளுக்கு தொடரும். எதிர்க்கட்சியாக இருப்பதற்கே திமுக.,விற்கு தகுதியில்லை. எங்களுக்கு பிரசாந்த் கிஷோர் போன்றோர்கள் தேவையில்லை. வலிமையான அமைப்பான சட்டசபையை புறக்கணித்துவிட்டு, செல்கின்றனர். எம்எல்ஏ.,க்கள் மக்கள் பிரச்னைகளை சட்டசபையில் எடுத்து சொல்கிறாரா என்று தான் பார்ப்பார்கள். ஆனால், திமுக.,வினர் பிரச்னைகளை பேசாமல் வெளிநடப்பு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்