Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் கூட வாபஸ்: குலாம்நபி ஆசாத்

பிப்ரவரி 03, 2021 10:03

புதுடில்லி: விவசாயிகள் பிரச்னை தொடர்பாக ராஜ்யசபாவில் 15 மணி நேரம் விவாதிக்க மத்திய அரசு ஒப்பு கொண்டதை தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடந்தது. இதனையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், ஆங்கிலேயர் ஆட்சியில் கூட வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார். ஜனாதிபதி உரை, பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் தாக்கல் என முக்கிய அலுவல்கள் முடிந்த நிலையில், அடுத்தடுத்த வழக்கமான பணிகளுக்காக பார்லிமென்டின் இரு சபைகளும் நேற்று கூடின. நேற்று விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று அவை கூடியதும், விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வலியுறுத்தின. இதனையடுத்து மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் இடையே பேச்சுவார்த்தையில் 15 மணி நேரம் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க ஒப்பு கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவை நடவடிக்கைகள் துவங்கின. விவசாயிகள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். காங்கிரசின் குலாம் நபி ஆசாத் பேசும் போது, வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்று கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கூட, விவசாயிகள் சட்டம் திரும்ப பெறப்பட்டது. டிராக்டர் பேரணிக்கு பின்னர் மாயமானவர்கள் குறித்து ஆராய தனிக்குழு அமைக்க வேண்டும். பேரணியில் வன்முறையை ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி.,க்கள் சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில்குமார் குப்தா ஆகியோர் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால், அவையை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியும், எம்.பி.,க்கள் அதனை பொருட்படுத்தவில்லை. வெங்கையாவின் எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து இன்றைய நாள் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர்களை சபையில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்