Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் பரபரப்பில் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

ஏப்ரல் 05, 2019 09:49

சென்னை: ஆம்னி பஸ்களில் பண்டிகை மற்றும் விசே‌ஷ காலங்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தவோ, முறைப்படுத்தவோ சரியான சட்ட விதிகள் இல்லாததால் தொடர்ந்து இந்த நிலை நீடிக்கிறது. 

ஆம்னி பஸ்சில் அவரவர் இஷ்டம் போல் பஸ்களின் வசதியின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

தற்போது கோடை விடுமுறை காலம் தொடங்குவதோடு மட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் அனைத்து பள்ளிகளும் 13-ந்தேதியுடன் மூடப்படுகிறது. 14-ந் தேதி முதல் மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுவதால் அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள், பொது நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப் பதிவு செய்ய பஸ், ரெயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

இதுதவிர 17-ந் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறையாகும். 19-ந் தேதி கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விடுமுறை ஆகும். அதைத் தொடர்ந்து 20 மற்றும் 21 சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். 

அதனால் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக வருவதால் 16-ந் தேதி அன்று வெளியூர் பயணத்தை தொடர்வார்கள். 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்களின் தேவையை அறிந்து ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். 

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏ.சி. பஸ்களின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். 

சென்னையில் இருந்து மதுரை, கோவை செல்ல ஏ.சி. பஸ்களில் ரூ. 2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. ஆம்னி பஸ்களுக்கு முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இக்கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் ரூ. 1000 வசூலிக்கப்படுகிறது. 

இதேபோல சேலத்துக்கு ரூ. 1100 முதல் ரூ. 1500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் ரூ. 2000 வரை வசூலிக்கிறார்கள். சாதாரண பஸ்களில் ரூ. 1000 முதல் ரூ. 1200 வரை வசூலிக்கப்படுகிறது. 

அரசு ஏ.சி. பஸ்களில் கட்டணத்தை ஒப்பிடும் போது இது இருமடங்கு அதிகமாக உள்ளது. அரசு பஸ்களில் திருச்சிக்கு ரூ. 435 வரையும் கோவைக்கு ரூ. 550 முதல் ரூ. 1000 வரையிலும் வசூலிக்கப்படுகிறது. 

சேலத்துக்கு ரூ. 500, மதுரைக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நேரத்தில் வெளியூர்களுக்கு பொது மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும். 

அரசு பஸ், ரெயில்களில் இடம் இல்லாததால் ஆம்னி பஸ்களை நாடும்போது அதனை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்