Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட கலெக்டர்

பிப்ரவரி 06, 2021 05:49

நாகர்கோவில்: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, குழித்துறை தாலுகா மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 முகாம்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டு தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஸ்கேன் சென்டர்கள், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ மனைகள் என 1147 நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரத்து 564 பணியாளர்களின் பெயர்கள் ஏற்கனவே கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி போட உள்ள நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் நாள், இடம், நேரம் ஆகிய தகவல்கள் அவர்களுடைய கைப்பேசிக்கு குறுந்தகவலாக கோவின் செயலி மூலம் அனுப்பப்படும். அவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யும்போது கொடுத்த அடையாள அட்டையுடன் வந்து முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாக மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள் 2,909 பேர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளார்கள். தற்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்துறையைச் சேர்ந்த 737 பணியாளர்களும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தைச் சேர்ந்த 1, 363 பணியாளர்களும்,

உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 2, 685 பணியாளர்கள் என மொத்தம் 4, 785 முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு தங்களது பெயா்களை முன்பதிவு செய்துள்ளார்கள். இந்தநிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று நாகா்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்