Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா வருகை- நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

பிப்ரவரி 06, 2021 06:06

சென்னை: தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் கடந்த டிசம்பர் மாதமே பிரசாரத்தை தொடங்கி விட்டார். ஒவ்வொரு மாவட்டமாக பிரசாரம் செய்து வரும் அவர் போரூரில் நாளை பிரசாரத்தை தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார்.

இந்த நிலையில் சசிகலா வருகிற 8-ந்தேதி சென்னைக்கு வருவதையொட்டி அ.தி.மு.க.வில் சலசலப்பு உருவாவதை தடுக்கும் வகையில் ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு தொலைபேசி வாயிலாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவசரம் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அமைப்பு செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுமானப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதால் சென்னை வரும் சசிகலா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு வந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகள் சசிகலாவை பார்க்க சென்னைக்கு 8-ந்தேதி அதிகளவில் வர உள்ளதால் அ.தி.மு.க. தொண்டர்களையும் அன்றைய தினம் தலைமை கழகத்துக்கு வரவழைக்கலாமா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பிரச்சனை மட்டுமின்றி கட்சி வி‌ஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது பற்றியும் இதில் பேசப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்