Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 500 கோவில்கள் கட்ட முடிவு

பிப்ரவரி 06, 2021 09:40

திருப்பதி: திருப்பதியில் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பக்தர்களின் கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர்ரெட்டி பேட்டிளித்தார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக 4.26 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.

மார்கழி மாதத்தில் பல ஆன்மீக நிகழ்ச்சி திருப்பதி, திருமலையில் நடத்தப்பட்டன. திருப்பதியில் உள்ள தேவஸ்தான ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் பஞ்சகவ்யத்தை (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்ய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

வருகிற 19-ந்தேதி ரத சப்தமியன்று சூரிய ஜெயந்தி உற்சவம் திருமலையில் நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் ஏழுமலையான் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அன்றைய தினம் தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன்கள் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மாசி மாதம் திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 6 மணி முதல் 6.40 மணி வரை விஷ்ணுபுராய சொற்பொழிவு நடத்தப்படும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆன்லைனில் வர்ச்சுவல் கல்யாண உற்சவம் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக வருகிற 19-ந்தேதி இணையதளத்தில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.

திருமலையில் கொரோனாவையொட்டி நடத்தப்பட்ட வேதபாராயணங்கள் 300 நாட்களை எட்டியுள்ளது. தெலுங்கு வருட பிறப்பன்று (ஏப்.13) கன்னட, ஹிந்தி மொழிகளில் தேவஸ்தான தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் 500 கோவில்களை கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது என்று ஜவஹர்ரெட்டி கூறினார்.

தலைப்புச்செய்திகள்