Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100 நாட்களில் தீர்வு காணப்படும்- மு.க.ஸ்டாலின் உறுதி

பிப்ரவரி 07, 2021 08:29

சங்கரன்கோவில்: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்ளில் கடந்த 2 நாட்களாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நேற்று மாலை நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, நாங்குநேரி, பாளை, அம்பை, ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பிரசார கூட்டம் வீரவநல்லூர் வெள்ளாங்குழியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டம் சங்கரன்கோவில்-சுரண்டை ரோட்டில் உள்ள அண்ணா திடலில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக நெல்லையில் இருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் சென்றார். அவருக்கு மாவட்ட எல்லையான தேவர்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாபன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் துரை ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மேள, தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரசாரத்திற்காக பிரம்மாண்ட மேடை நிறுவப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் பின்புறம் உள்ளவர்களும் நிகழ்ச்சிகளை காணும் வகையில் பல இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தர போராரு என்ற வாசகம் அடங்கிய பல்வேறு டிஜிட்டல் போர்டுகள், போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்தனர். கூட்டம் நடைபெறும் பந்தலின் முன்பு நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்து அவர்களின் மனுக்களை பதிவு செய்து வாங்கி அதனை பெட்டியில் போட்டு மேடையில் வைத்தனர்.

தொடர்ந்து காலை மேடைக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். சங்கரன்கோவிலில் இன்று மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்கள் தொகுதியில் நான்’ நிகழ்ச்சியில் திரண்டிருந்த கூட்டம். பின்னர் மேடையில் இருந்து இறங்கிய அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் சென்று நலம் விசாரித்து கை கொடுத்தார். அப்போது ஏராளமான பெண்கள், இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த மனு பெட்டியில் இருந்து 10 மனுக்களை எடுத்து அதற்குரியவர்களை பேச கூறினார். அவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதற்கு பதில் அளித்து பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார். முன்னதாக மேடைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அங்கு சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை விளக்கும் வகையில் ஒரு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

தலைப்புச்செய்திகள்