Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா: எம்.ஜி.ஆர். வீட்டுக்கு செல்ல அதிரடி திட்டம்

பிப்ரவரி 07, 2021 08:57

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை அடைந்த சசிகலா கடந்த மாதம் 27-ந் தேதி விடுதலையானார். தற்போது அவர் பெங்களூரில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். நாளை காலை 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்னை வருகிறார்.சசிகலாவுக்கு கர்நாடக- தமிழக எல்லையில் இருந்து வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது: பெங்களூரில் இருந்து நாளை காலை சென்னைக்கு வரும் சசிகலாவுக்கு வழி நெடுக ஒவ்வொரு இடத்திலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்ராம்பள்ளி, விலக்கல் நத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், வேலூர் பள்ளிகொண்டா, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பாலுசெட்டி சத்திரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் மிக பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

அதன் பிறகு சென்னை எல்லையான நசரத்பேட்டையிலும் மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பாரிவாக்கம், பூந்தமல்லி, குமணன்சாவடி, ஐயப்பன்தாங்கல், போரூர், டி.எல்.எப். சந்திப்பு, ராமாவரம் தோட்டம் (எம்.ஜி. ஆர். இல்லம்) ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ராமாவரம் தோட்டத்தில் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் சசிகலா எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்று அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு நந்தம்பாக்கம் வர்த்தக மையம், புனித தோமையார் மலை, கிண்டி கத்திபாரா சந்திப்பு, செல்லம்மாள் கல்லூரி, சைதை சின்னமலை ஏ.ஜி. கிறிஸ்தவ தேவாலயம், பனகல் மாளிகை, தாதண்டர் நகர், வேம்புலி அம்மன் கோவில், தியாகராயநகர் பஸ் நிலையம், விவேக் அன் கோ, அபிபுல்லா சாலை ஆகிய இடங்களில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

அதன் பிறகு அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டுக்கு சென்று சசிகலா தங்குகிறார். சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சசிகலாவுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்று நேற்று மனு கொடுத்துள்ளேன். அவர்கள் மனுவை பெற்றுக்கொண்டார்கள்.

மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் போது எந்த வகையான பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதோ அதே போன்ற பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.நாங்கள் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ரோட்டின் ஓரமாக நின்றுதான் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். போலீசார் அதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்று எதிர் பார்க்கிறோம். என்று ஜி.செந்தமிழன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்