Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஏழுமலையான் கோவில் கட்ட 4 ஏக்கர் நிலம், ரூ.3.1 கோடி நன்கொடை

பிப்ரவரி 07, 2021 11:53

திருப்பதி: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் வடிவிலான கோவில்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்மாணித்து வருகிறது.இதேபோன்று, உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலைக் கட்ட அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு 4 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

மேலும் அந்நிலத்தில் கோவில் கட்ட மக்களிடம் நன்கொடை திரட்டி அளிப்பதாகவும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு உறுதியளித்திருந்தார்.அதன்படி, உளுந்தூர்பேட்டையில் ரூ.20 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தையும், அதில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு ரூ.3.16 கோடியையும் அவர் தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டியிடம் வழங்கினார்.

திருமலையில் உள்ள குப்பா சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நிலத்துக்கான பத்திரங்கள், நிதிக்கான வரைவோலை ஆகியவற்றை அளித்தார். இதனை பெற்றுக்கொண்ட பின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேவஸ்தானம் சார்பில் தர்ம பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.விரைவில் ஜம்முவில் ஏழுமலையான் கோவிலைக் கட்ட அடிக்கல் நாட்ட உள்ளோம்.

உளுந்தூர்பேட்டையில் கோவில் கட்ட குமரகுரு நிலம் மற்றும் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். கோவில் கட்டுவதற்குக் கூடுதலாக தேவைப்படும் நிதியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அங்கு அடிக்கல் நாட்டப்பட்டு கோவில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அலிபிரி முதல் காளி கோபுரம் வரை நிழற்கூரை அமைக்கும் பணி ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு பெறும். திருமலை வரையிலான பணி, வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்துக்குள் முடிக்கப்படும் என்றார்.
 

தலைப்புச்செய்திகள்