Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம்

பிப்ரவரி 09, 2021 10:38

சென்னை:டெல்லியில் மாநில கட்சிகள் அலுவலகம் அமைத்துக்கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அ.தி.மு.க.வுக்கும் இவ்வாறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது. 3 மாடிகளுடன் பிரமாண்டமான முறையில் கட்டிடம் கட்டப்பட்டது.

அதில் ஒரு மாடியில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியும், மற்றொரு மாடியில் ஜெயலலிதா புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்படுகிறது.இத்துடன் கூட்ட அரங்கம், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கும் அறைகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. இதன் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் இருந்தது.

கடந்த 21-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் அ.தி.மு.க. அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார். விரைவில் கட்டிட பணிகளை முடிக்கும்படி அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பணிகள் வேகமாக நடந்தன. இப்போது கட்டுமான பணி முற்றிலும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வருகிற 21-ந்தேதி திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.20-ந்தேதி மத்திய நிதி அயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். நிதி அயோக் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர் அ.தி.மு.க. அலுவலக திறப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

சசிகலா வருகையால் தமிழக அரசியல் சூழ்நிலையில் மாற்றங்கள் உருவாகி இருக்கின்றன. டெல்லி செல்லும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இது சம்மந்தமாக பா.ஜனதா தலைவர்களுடன் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும் போது சசிகலா பேட்டி அளித்தார். அப்போது பொது எதிரியான தி.மு.க.வை தோற்கடிப்பதே எங்களுடைய ஒரே நோக்கம். எனவே அ.தி.மு.க.வினர் ஒன்றாக செயல்படுவோம் என்று கூறினார்.

அதாவது அ.தி.மு.க.வுடன் ஒருங்கிணைந்து செயல்பட சசிகலா தனது விருப்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.அ.தி.மு.க.வும், சசிகலாவும் ஒன்றாக இருந்தால் தான் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம் பா.ஜனதாவுக்கும் இருக்கிறது. அதைத்தான் இப்போது சசிகலா ஆமோதித்து இருக்கிறார்.எனவே இது சம்மந்தமாக அ.தி.மு.க. தலைவர்கள், பா.ஜனதா தலைவர்களுடன் பேச இருப்பதாக தெரிகிறது. 

அரசியல் சம்மந்தப்பட்ட முக்கிய விவகாரங்களை பா.ஜனதா மூத்த தலைவர் அமித்ஷா தான் கவனித்து வருகிறார்.அவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து இது சம்மந்தமாக ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால் அது தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் திருப்பங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்