Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம்- இஸ்ரோ விளக்கம்

பிப்ரவரி 09, 2021 11:16

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்த தில் தவுலிகங்கை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 2 நீர்மின் நிலையங்கள் அடித்து செல்லப்பட்டன.அப்போது அங்கு பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களையும் வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. தவுலிகங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2-வது நீர்மின் நிலையத்தில் 2 சுரங்கங்கள் உள்ளன.

திடீர் வெள்ளத்தில் சுரங்கம் முற்றிலும் மூழ்கியது. அதற்குள் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். னிப்பாறை விழுந்தததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். பனிப்பாறைக்கு கீழே தண்ணீர் சரியாக உறையாமல் ஏரி உருவாகி இருக்க வேண்டும். இதன் காரணமாக பிடிமானம் இல்லாமல் பாறை உடைந்து விழுந்து இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

அந்த இடத்தில் பனிப் பாறை முற்றிலும் வெடித்து விழுந்து இருப்பதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் அவ்வாறு வெடிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். சம்பவம் நடப்பதற்கு முன்பு அந்த பகுதியில் எடுக்கப்பட்ட பாறை படத்தையும், 7-ம் தேதி பனிப்பாறை விழுந்ததற்கு பிறகு எடுக்கப்பட்ட படத்தையும் ஒப்பிட்டு பார்த்து இந்த கருத்தை அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இஸ்ரோவின் தொலை உணர்வு ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. எனவே அந்த இடத்தில் ஏரி அமைந்திருந்து அதன் மூலமாக பாறை வெடித்து விழவில்லை. பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

இதனால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.பனிச்சரிவு ஏற்பட்ட இடம் கடல் மட்டத்திற்கு மேல் 5,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 14 கி.மீட்டர் சுற்றளவுக்கு பனிச்சரிவு ஒரே நேரத்தில் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 3 கோடி கியூபிக் மீட்டர் தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறி இருக்கிறது. இதனால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்