Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவர்னர் மீது ஜனாதிபதியிடம் புகார்- முதலமைச்சர் டெல்லி பயணம்

பிப்ரவரி 09, 2021 12:11

புதுச்சேரி: புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையில் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவையில் தனக்குத்தான் அதிகாரம் என கவர்னர் கிரண்பேடி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருகிறார் என்றும், மாநில வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் நாராயணசாமி, அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா போராட்டம், ஊர்வலம் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து புகார் செய்ய நாராயணசாமி டெல்லி சென்றார்.

ஆனால், குடியரசு தின விழா பணிகளில் ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததால் சந்திக்க முடியவில்லை. பின்னர் நேரம் ஒதுக்கித்தருவதாக கூறினார். இதனால் நாராயணசாமி புதுவை திரும்பினர். இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் இன்று மாலை டெல்லி செல்கின்றனர்.

அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர். அப்போது புதுவை மக்களிடம் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளையும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கின்றனர். அரசுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளதை விளக்கி கூறுகின்றனர். நாளை மறுநாள் காலை புதுவை திரும்புகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்