Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தை அமாவாசை- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்

பிப்ரவரி 11, 2021 12:10

சென்னை :ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) தை அமாவாசையாகும். ஆடி அமாவாசையின் போது கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் திதி கொடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் திதி கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்நிலையில் இன்று அமாவாசையின் போது திதி கொடுக்க அரசின் சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இன்று காலை முதலே நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

சென்னையில் கடற்கரை, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்களிலும் மற்றும் நீர் நிலைகளில் பக்தர்கள் அதிகாலையிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் அதிகாலையிலேயே பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அதே போல் காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தை அமாவாசையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தை அமாவாசையான இன்று குற்றாலம், பாபாநாசம் தாமிரபரணி, வேதாரண்யம், கன்னியாகுமரி, திருச்செந்தூரிலும் அதிகாலை முதலே கடலில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்