Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பிப்ரவரி 12, 2021 12:10

ராஜபாளையம்: ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது மாலையாபுரம். முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். எனவே அந்தப் பகுதியில் விபத்துகளை குறைக்க 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் காந்தி சிலையில் இருந்து, முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

அப்போது மாலையாபுரம் பகுதியில் இருந்த 2 வேகத்தடைகளும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு அளித்துள்ளனர். ஆனாலும் வேகத் தடைகளை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முடங்கியாறு சாலையில் ஏற்கெனவே இருந்த இடங்களில் புதிய வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் பகுதியை மட்டும் அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே விபத்தை தடுக்க விரைவில் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் முடங்கியாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. தனியார் கல்லூரிக்கு செல்லும் பஸ் பாதியில் நிறுத்தப்பட்டதால், கல்லூரி மாணவ, மாணவிகள் நடந்தே கல்லூரிக்கு சென்றனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையாபுரம் பகுதியில் வேகத் தடை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் முடங்கியாறு சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்