Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமலுடன் காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் கைகோர்க்க வேண்டும்- பழ.கருப்பையா

பிப்ரவரி 12, 2021 12:11

சென்னை: சென்னை வானகரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அதே மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மூத்த அரசியல் வாதியும், முன்னாள் எம்.எல். ஏ.வுமான பழ.கருப்பையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அ.தி. மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. 2 கட்சிகளுக்கு மாற்றாக உருவாக வேண்டிய காங்கிரஸ் அதனை செய்ய தவறிவிட்டது. கம்யூனிஸ்டு கட்சிகளும் அதே நிலையில்தான் உள்ளன. எனவே தமிழகத்தில் மாற்று அரசியல் நிகழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக பாதையில் மக்கள் நீதி மய்யம் பயணிக்கிறது. இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை மாற்றத்துக்கான கமல்ஹாசனுடன் கை கோர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை அல்ல. எனவே அந்த கட்சிகள் நிச்சயம் தமிழக அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதற்கான நேரம் இந்த தேர்தலில் அமைந்துள்ளது. இதனை மாற்றத்தை விரும்பும் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக பழ. கருப்பையாவிடம் கேட்ட போது சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேச வேண்டும் என்று கமல்ஹாசன் விடுத்த அழைப்பை ஏற்று அதில் பங்கேற்றதாக தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்