Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அவதூறு தகவல்கள் வெளியீடு -டுவிட்டர் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பிப்ரவரி 12, 2021 01:25

புதுடெல்லி: இந்தியாவில் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், லிங்டு இன் போன்ற சமூக வலைதளங்கள் முன்னணி இடத்தில் இருக்கின்றன. இவற்றின் மூலம் பொதுமக்கள் தங்கள் தகவல்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டுவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்கள் மூலமாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை சிலர் பரப்பி வந்தனர்.

காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானும் இதன் பின்னணியில் இருந்தது. இதுபோன்ற தகவல்களை பரப்பிய 1,178 கணக்குகளை முடக்கும்படி டுவிட்டர் தளத்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் முழுமையாக அகற்றாமல் 500 கணக்குகளை மட்டும் அகற்றியது. தகவல் தொடர்பு சட்டப்படி சமூக வலைதளங்கள் விதி மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை ஏடுப்பதற்கு இடம் உள்ளது. எனவே அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது.

ஆனாலும் அந்த நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கின்றன. வருங்காலத்தில் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தனி ஒழுங்கு முறை அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். அதற்கு தலைமை தீர்வு அதிகாரி நியமிக்கப்படுவார். மேலும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். அதில் செயலாளர் மட்டத்தில் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

புகார்கள் இருந்தால் இவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். செயலாளர் மட்ட அதிகாரி 36 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பார். அதன்பிறகு இந்த விவகாரம் கண்காணிப்பு குழுவுக்கு கொண்டு செல்லப்படும். அந்த குழு விசாரணை நடத்தி இறுதி முடிவை எடுக்கும். இதற்காக புதிய விதிகளை மத்திய அரசு உருவாக்க உள்ளது. அதன் மூலமாக சமுக வலைதல நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளிவருவது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி வினித் கோயங்கா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறான மற்றும் ஆபாசமான தகவல்கள், பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை கட்டுப்படுத்துவதற்கு உரிய அமைப்புகள், தொழில் நுட்பங்கள் இல்லை.

எனவே அது சம்மந்தமாக அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் உத்தரவு களை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே, தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது சம்மந்தமாக டுவிட்டர் நிறுவனமும், மத்திய அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்