Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாத்மா காந்தி பேத்தி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு

பிப்ரவரி 14, 2021 11:46

புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையான காஜிபூர், சிங்கு, திக்ரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கு திரண்டு, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுடன் மத்திய அரசு பலமுறை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாராகாந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.84 வயதான அவர் டெல்லி- உத்தரபிரதேச எல்லையில் உள்ள காஜி பூருக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவர் பொறுப்பிலும் இருக்கிறார்.

தாராகாந்தியுடன் ஸ்மார்க் நிதி தலைவர் ராமச்சந்திரா ராகி, அகில இந்திய சர்வ சேவா சங்க நிர்வாகி அசோக் சரண், காந்தி ஸ்மார்க்நிதி இயக்குனர் சஞ்சய் சிங்கா, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனர் அண்ணாமலை ஆகியோரும் உடன் வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசியல் காரணத்துக்காக நாங்கள் இங்கு வரவில்லை. நம் வாழ்நாள் முழுவதும் உணவளித்த விவசாயிகளுக்காக வந்திருக்கிறோம்.

என்ன நடந்தாலும் விவசாயிகள் பயனடைய வேண்டும். விவசாயிகளின் கடின உழைப்பு பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. விவசாயிகளின் நலனே நாட்டின் நலம். விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். விவசாயிகளின் பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும் என்று தாராகாந்தி பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்