Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவினர் குக்கர் சின்னத்தை பார்த்து பயப்படுகிறார்கள்: தங்க தமிழ்ச்செல்வன்

ஜனவரி 28, 2019 06:40

வேடசந்தூர்: திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய, நகர அ.ம.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். 

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அங்கேயே இருந்தனர். அப்போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் தற்போது அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளனர். அதுவும் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. 

திருவாரூர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா பாணியில் நாங்கள் யாரையும் எதிர் பார்க்காமல் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கினோம். ஆனால் கஜா புயலை காரணம் காட்டி தேர்தலை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நிறுத்தி விட்டன.  திருவாரூரில் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பதால் அதனை எதிர்கொள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினருக்கு பயம் வந்து விட்டது. 

தேர்தல் ஆணையத்தில் குக்கர் சின்னம் கேட்டு மனு அளித்திருந்தோம். ஆனால் அதனையும் தர மறுத்து விட்டனர். இரட்டை இலை சின்னத்தை வைத்துள்ளபோதும் குக்கர் சின்னத்தை பார்த்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பயப்படுவது ஏன்? வருகிற பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. மகத்தான வெற்றியை பெற்று நிரந்தரமான ஒரு சின்னத்தை பெறுவோம் என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்