Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் வெற்று நடை தான் போடுகிறது- மு.க.ஸ்டாலின் தாக்கு

பிப்ரவரி 21, 2021 01:24

திருப்பூர்:திருப்பூர்-காங்கயம் பிரிவில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:திருப்பத்தை ஏற்படுத்த கூடிய ஊர் தான் திருப்பூர். ஒரு காலத்தில் ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்பட்டு வந்த திருப்பூர் தற்போது நடைபெறும் ஆட்சியால் ‘டல்’ சிட்டியாக மாறிவிட்டது. இந்தியாவிலேயே முதன் முதலாக உள்ளாட்சி துறையில் திருநங்கைகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து, பதவியில் அமர்த்தி அழகு பார்த்த கட்சி தி.மு.க. இதுதவிர திருநங்கைகளுக்கு என தனி வாரியம் அமைத்ததும் தி.மு.க தான்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருநங்கைகளின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் மேற்கு மண்டலத்தில் உள்ள தொழில் வளர்ச்சிக்கு என தனிகவனம செலுத்தப்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வருகிறது என்ற காரணத்தினாலேயே அது தள்ளுபடி, இது தள்ளுபடி என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்.

கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு மக்களுக்கு இதுவரை எதுவும் செய்ததில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெயரில் மட்டும் தான் ஸ்மார்ட் உள்ளது. ஊழல் திட்டத்திற்கு மறுபெயர் தான் ஸ்மார்சிட்டி திட்டம். அதன் பெயரிலேயே பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். பழைய கட்டிடத்திற்கு பச்சை பெயிண்ட் அடித்து தான் மினி கிளினிக் என அழைத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யாமல், ஆட்சி முடிய போகும் கடைசி நேரத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். திட்டங்களை தொடங்கி வைப்பதோடு மட்டுமில்லாமல் அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்றெல்லாம் பேசி வருகிறார். நான் கேட்கிறேன் எடப்பாடி பழனிசாமியா? அல்லது மந்திரவாதி பழனிசாமியா?.

அ.தி.மு.க ஆட்சியில் 2 முறை உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முதலீடுகளை ஈர்த்ததாகவும், லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை எதுவுமே நடந்தபாடில்லை. இப்படி கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றாதவர் என்றால் அது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். பொய்கள் சொல்வதில் பழனிசாமிக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி தான். ஆனால் ஏதோ இந்த திட்டத்தை தாங்கள் நிறைவேற்றி விட்டதாக இந்த பகுதியில் பெருமை சொல்லி வருகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.தி.மு.க ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டு வரும்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. வெற்று நடைதான் போடுகிறது என்று ஸ்டாலின் பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்