Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்மாவட்டங்களில் ராகுல் காந்தி 3 நாள் சுற்றுபயணம்

பிப்ரவரி 25, 2021 08:38

நெல்லை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) முதல் மார்ச் 1-ந்தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக நாளை மறுநாள் 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு காலை 10 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி செல்லும் ராகுல்காந்தி வழியில் பொதுமக்களை பார்த்து திறந்த வேனில் நின்று கை அசைத்து செல்கிறார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் முக்கிய வக்கீல்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். அங்கிருந்து தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை வரை “ரோடு ஷோ” மூலம் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். குரூஸ் பர்னாந்து சிலை பகுதியில் பொது மக்களிடம் பேசி ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் உப்பள தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் ராகுல்காந்தி அங்கு பேசுகிறார்.சாத்தான்குளம், இட்டமொழி வழியாக மன்னார்புரம் விலக்கு சென்று பொதுமக்களிடம் பேசுகிறார். அங்கிருந்து பரப்பாடி வழியாக நாங்குநேரி சென்று இரவு ரூபி மனோகரன் ஏற்பாடு செய்துள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலம் நெல்லை வந்து பிரபல ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பாளையில் உள்ள சேவியர் கல்லூரிக்கு சென்று பேராசிரியர்கள், படித்த அறிஞர்கள் ஆகியோரோடு கலந்துரையாடுகிறார்.பின்னர் அங்கிருந்து நெல்லை சந்திப்பு வழியாக நெல்லையப்பர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திறந்த வேனில் “ரோடு ஷோ” நடத்துகிறார்.

அப்படியே டவுன் காந்திசிலை அருகே சென்று பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசி ஆதரவு திரட்டுகிறார். நெல்லையில் இருந்து கார் மூலம் ஆலங்குளம் சென்று பேசுகிறார். அங்கிருந்து பாவூர்சத்திரம், சுரண்டை சென்று பேசுகிறார். இடையில் பீடி தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளார்.

சுரண்டையில் இருந்து கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி ஆகிய பகுதிகளுக்கும் சென்று பேசுகிறார். இடையில் அந்தந்த பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுக்கும் வரவேற்பை பெற்றுக்கொள்கிறார்.தென்காசியில் இருந்து கார் மூலம் கடையம், அம்பை, சேரன்மகாதேவி, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் செல்கிறார். செல்லும் வழியில் முக்கிய பகுதிகளில் பேசுகிறார். 28-ந்தேதி இரவு நாகர்கோவிலில் தங்குகிறார்.மறுநாள் 1-ந்தேதி (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அங்கிருந்து கேரளா புறப்பட்டு செல்கிறார்.
 

தலைப்புச்செய்திகள்