Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு

பிப்ரவரி 25, 2021 08:42

சென்னை:தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று அதிகாலை 6 மணி அளவில் மின்சார ரெயில் புறப்பட்டு வந்தது. தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்தபோது உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பின்னால் வந்த மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

இதேபோல் கடற்கரை- தாம்பரம் மார்க்கம் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது. அந்த மார்க்கத்திலும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகிறது.இதனால் இன்று அதிகாலை முதலே மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் அவர்கள் குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரையை நோக்கி வந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. இதேபோல் கடற்கரை- தாம்பரம் மார்க்க ரெயில் சேவை வழக்கமான பாதையில் மெதுவாக இயக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு பின்னர் மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட இடைவெளியுடன் இயக்கப்பட்டன. ரெயில்சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் ஆட்டோ, கார்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.


 

தலைப்புச்செய்திகள்