Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை 100  ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம்

பிப்ரவரி 26, 2021 02:28

சேலம்:மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு ரூ.565 கோடி மதிப்பீட்டில் நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்து கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மேட்டூர் அருகே திப்பம்பட்டியில் பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் மற்றும் கண்ணந்தேரி ஏரிகள் துணை நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி துணை நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையம், கண்ணந்தேரி ஏரி துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

இந்தநிலையில், திட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணை திப்பம்பட்டியில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மேட்டூர் அணை உபரிநீரை ரூ.565 கோடியில் வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இத்திட்டத்தால் மொத்தம் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும். மேலும், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்