Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 3-வது அணி வலுப்பெறுமா?

மார்ச் 01, 2021 01:09

சென்னை: வருகின்ற சட்டசபை தேர்தலில் புதிதாக உருவாகும் 3-வது அணி வலுப்பெற வாய்ப்பு உள்ளது கூறப்படுகிறது. 

தமிழகத்தில் அதிமுக, திமுக இருமுனை போட்டி என்பது எல்லோரது கணிப்பாக இருந்தாலும் புதிதாக கமலுடன் கை கோர்க்கும் கட்சிகளால் 3-வது அணியும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

மூன்றாவதாகவும் ஒரு அரசியல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. அது நகர்வதை பொறுத்துதான் புயலாக உருவெடுக்குமா அல்லது வலுவிழந்து போய்விடுமா என்பது தெரிய வரும தமிழக தேர்தல் களத்தை அதகளம் செய்ய அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கூட்டணிகள் வரிந்துகட்டுகின்றன. இந்த 2 திராவிட கட்சிகளையும் சுற்றித்தான் மற்ற கட்சிகள் வட்டமிடுகின்றன.

எனவே இருமுனை போட்டி என்பதுதான் எல்லோரது கணிப்பாக இருந்தது. ஆனால் இப்போது புதிதாக கமலுடன் கை கோர்க்கும் கட்சிகளால் 3-வது அணியும் வலுப்பெறலாம் என்று நினைக்க வைக்கிறது. பொதுவாகவே அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வாக்குகளை ஒருங்கிணைக்க ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்த முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

இதற்கு கடந்த கால தேர்தல் வரலாறுகளே சாட்சி. மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிகளுடன் திராவிட கட்சிகள் கூட்டணி அமைப்பது தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த காட்சி தொடர்கிறது. அதேநேரம் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக 3-வது அணி என்ற முன்னெடுப்புகள் முன்னேறியதும் இல்லை.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1988-ல் தமிழக காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தார். அப்போது 3-வது அணி உருவாகி களம் கண்டது. வலுவான ஆளுமை என்று கருதப்பட்ட மூப்பனார் தலைமையிலான அணியும் சாதிக்கவில்லை. இருந்தாலும் 20 சதவீத வாக்குகள் பெற்று 26 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் 3-வது அணி கைப்பற்றிய அதிகமான தொகுதிகள்.

1996-ல் வைகோ, தி.மு.க.வில் இருந்து வெளியேறி மிகப்பெரிய சக்தியாக பார்க்கப்பட்டார். அப்போது அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து 3-வது அணியை உருவாக்கியது. அந்த அணி வெற்றி பெற்றால் வைகோதான் முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை.

அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், த.மா.கா. ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மிகப்பெரிய 3-வது அணியை உருவாக்கியது.  வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்வர் என்றும் பிரசாரம் செய்தனர்.

அந்த கூட்டணியும் தோல்வியைத்தான் தழுவியது. அது மட்டுமல்லாமல் பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது. இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுவது வாடிக்கைதான். வருகிற தேர்தலுக்காகவும், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தொகுதி பங்கீட்டு பேச்சில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த இரு முன்னணி கட்சிகளுக்கும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். 

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி தி.மு.க.வில் இருந்தது. தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டுதான் பாரிவேந்தர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார். ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தி.மு.க. அணியில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடன் கைகோர்த்து உள்ளார். இந்திய ஜனநாயக கட்சி அரசியல் அங்கீகாரம் பெற 12 தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும். தி.மு.க. கூட்டணியில் அது இயலாத காரியம். எனவே தான் வெளியே வந்ததாக கூறி இருக்கிறார். 

இப்போது சரத்குமார், கமல்ஹாசனையும் சந்தித்து இருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையாவும் கமலுடன் இணைந்து உள்ளார். ஏற்கனவே அரசியல் களத்துக்கு வந்திருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் கமல் அணிக்கு வரலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

எனவே இப்போதைய சூழலை பொறுத்தவரை கமல், சரத்குமார், ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் மூன்றாவது அணியாக உருமாறி தேர்தல் களத்தை ஒரு கை பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். ஒருவேளை தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து வந்தால் கமலுடன் கூட்டணி அமைக்கலாம். இந்த பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்ததுதான். ஆனால் அவ்வாறு வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதே அனைவரின் கருத்து.

தலைப்புச்செய்திகள்